search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் ஆயிரம்"

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். #PMModi #Farmers

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம் பயன்அடைவார்கள். இதற்காக மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முதல் தவணையாக தலா ரூ.2,000 இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் போடப்படுகிறது.

    உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இன்று நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள், கோரக்பூரில் பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவி தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறேன், இந்த திட்டம் நாட்டுக்கே உணவு வழங்கும் கோடிக்கணக்கான கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு பயன்அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    “பிப்ரவரி 1-ந்தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஒரே மாதத்தில் செயல் வடிவம் பெறுகிறது. இது புதிய இந்தியாவின் புதிய கலாச்சாரம்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

    இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதாமோகன்சிங், நிதித்துறை இணை மந்திரி சிவ்பிரதாப் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர். #PMModi #Farmers

    ×